தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறையை கண்டித்து தூத்துக்குடியில் நாட்டுப் படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு முழுமையாக அமைத்து தராத தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறையை கண்டித்து நாட்டுப் படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நாட்டுப் படகு மீன்பிடிச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 1200 நாட்டுப் படகுகள் மூலம் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை சீற்றம் காரணமாக நாட்டுப் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி கடும் சேதம் அடைந்தது இதைத் தொடர்ந்து திரேஸ்புரம் நாட்டு பகுதியில் கடற்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை அடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இரண்டு பகுதிகளாக தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு பகுதி 1050 மீட்டர் தூரம் வரையும் மற்றொரு பகுதி 538 மீட்டர் தூரம் வரையும் போட நிதி ஒதுக்கப்பட்டு பொதுப்பணித்துறை சார்பில் தூண்டில் வளைவு போடப்பட்டது. ஆனால் 538மீட்டர் போட வேண்டிய இடத்தில் சுமார் 250 மீட்டர் மட்டுமே தூண்டில் வளைவு போடப்பட்டு மீதி 285 மீட்டர் உரிய நிதி இல்லாமல் போடப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இவ்வாறு முறையாக தூண்டில் வளைவு முழுமையாக அமைக்கப்படாததால் தொடர்ந்து நாட்டுப் படகுகள் இயற்கை சீற்றத்தின் போது மற்றும் காற்று அதிகமாக அடிக்கும் போது ஒன்றோடு ஒன்று மோதி தொடர்ந்து சேதமாகி வருவதுடன் ஆண்டுக்கு ஒரு படகிற்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே விடுபட்ட 285 மீட்டர் தூண்டில் வளைவை உடனடியாக அமைக்க வேண்டுமென தமிழக அரசு மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதுடன் நாட்டுப்படகு மீனவர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் தூண்டில் வளைவு உடனடியாக முழுவதுமாக அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் தமிழக அரசு மீன்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

