கவின் குடும்பத்தினருக்கு செல்வப்பெருந்தகை ஆறுதல்
படுகொலை செய்யப்பட்ட IT ஊழியர் கவின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆறுதல் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் IT ஊழியர் கவின் கடந்த 27ஆம் தேதி காதல் விவகாரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் நான்கு நாட்களாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என போராடி வந்தனர்.

இந்த நிலையில் 5ம் நாளான நேற்று முன்தினம் கவின் உடலை வாங்க அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து கவின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கவின் பெற்றோரை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, ராபர்ட் ப்ரூஸ் MP, ஊர்வசி அமிர்தராஜ் MLA உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆறுதல் கூறினர்.

அப்போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் S C பிரிவு தலைவர் A.D.பிரபாகரன், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், காங்கிரஸ் எடிசன், போஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், “கவின் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. மீண்டும் ஒரு முறை தமிழ்நாட்டில் இதைப்போன்ற ஆணவ படுகொலை நடக்காமல் காவல்துறை பார்த்துக் கொள்ள வேண்டும். கல்வியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று கோல்ட் மெடல் வாங்கிய ஒரு இளைஞனை படுகொலை செய்துள்ளனர்.”
“இதை எந்த ஜனநாயக சக்திகளும் ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் சொல்லுகின்ற செய்தியாக இந்த படுகொலை அமைந்திருக்கிறது. இதை மனிதாபிமானம் உள்ளவர்கள் மனசாட்சி உள்ளவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் ஒருவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.”
“எனவே தான் ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். கவின் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவருடைய தம்பி நன்கு படித்தவர் பட்டதாரி ஆக இருக்கிறார். அரசு வேலைவாய்ப்பை அந்த தம்பிக்கு வழங்க வேண்டும். பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.”
“காசி பாண்டியன் என்ற காவல்துறை ஆய்வாளர் தொடர்ந்து மிரட்டினார் என்று குடும்பத்தை சார்ந்தவர்கள் புகாராக தெரிவித்து வருகிறார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு சிசிடிவி இருந்ததை இரண்டு சிசிடிவி மறைத்து விட்டதாகவும் அதில் தான் இன்னும் கூலிப்படைகள் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் படம் பிடித்து இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.”
“உண்மையான குற்றவாளிகள் யாரையும் விட்டுவிடக்கூடாது. அனைவரையும் தண்டிக்க வேண்டும். இந்த கவின் படுகொலை என்பது இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் இந்த விசாரணையும் தீர்ப்பும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கை அளிக்க வேண்டும்.”
“ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டமன்றத்தைக் கூட்டி சட்டம் இயற்ற வேண்டும். சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை உள்ளது. திறமையான அதிகாரிகள் உள்ளனர். சென்னையில் தலைமை இடமாக வைத்துக் கொண்டு செயல்படுகிறது. பாளையங்கோட்டை தலைமை இடம் கிடையாது. உண்மை குற்றவாளிகளை அவர்கள் கண்டறிவார்கள்” என்றார்.

