தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் ஐப்பசி திருகல்யாண உற்சவம்: கொடியேற்றத்துடன் துவக்கம்
தூத்துக்குடியில் மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் ஐப்பசி திருகல்யாண உற்சவத்திற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழமையான ஆலயமான அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் வருடத்தில் கந்தசஷ்டி திருவிழா, சித்திரை திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண உற்சவம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருகல்யாண உற்சவத்திற்கான கொடியேற்றம் சிவன்கோவில் உள்ள கொடி கம்பத்தில் கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த ஐப்பசி திருக்கல்யாண உற்சவ திருவிழாவில் தினமும் மாலை சுவாமி அம்பாள் வீதி உலா மற்றும் தீபாராதனை நடைபெற இருக்கின்றது. மேலும் ஐப்பசி திருக்கல்யாண உற்சவத்தின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 13ம் தேதியும், திருக்கல்யாண வைபவம் 15ம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது.
விழாவில் கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல அலுவலர் தமிழ்ச்செல்வி, தொழில் அதிபர் கேஏபி சீனிவாசன், அறங்காவலர்கள் செந்தில்குமார், கந்தசாமி, பிஎஸ்கே ஆறுமுகம் சாந்தி, ஜெயலட்சுமி, மந்திர மூர்த்தி, முன்னாள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாரியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் அம்மன் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடைபெறும். வருகிற 13ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணிக்கு பாகம்பிரியாள் அம்மன் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 15ம் தேதி சனிக்கிழமை இரவு 8:00 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். விழா நாட்களில் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

