திண்டுக்கல்லில் அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்கள் பறிமுதல்: வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி
திண்டுக்கல்லில் 10 அரசு பேருந்து உட்பட 25 தனியார் பேருந்துகளில் இருந்து அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்கள் பறிமுதல்., வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி.

37ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தின் படி 70 டெசிபல் அளவுக்கு மட்டுமே ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்த வேண்டும்.
ஆனால் சில அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொதுமக்களின் கேட்கும் திறனை பாதிக்கும் வகையிலும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பொருத்தி இருந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவுறுத்தலின்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் திண்டுக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த், வத்தலகுண்டு ஆய்வாளர் இளங்கோ, வேடசந்தூர் ஆய்வாளர் செல்வம், நத்தம் ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளிலும், 25க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளிலும் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மீண்டும் ஏர் ஹாரன் பயன்படுத்தும் பேருந்துகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

