திண்டுக்கல் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் ஆனி உற்சவ விழா
திண்டுக்கல் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் ஆனி உற்சவ விழாவை முன்னிட்டு அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் பழனி ரோடு செல்லாண்டியம்மன் கோவில் வடக்கு தெரு பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில். இத்திருக்கோவிலில் எண்பதாம் ஆண்டு ஆனி உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் இருபத்திநான்காம் தேதி சாமி சாட்டுதலுடன் உற்சவ விழா துவங்கியது. இந்த உற்சவ விழாவின் ஒரு பகுதியாக மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திரு கோவிலின் முன்பு கூடிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு பக்தர்கள் 15 அடி நீள அலகு குத்தியும், ஒருவர் ஒன்பது அடியில் அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பின்னர், ஸ்ரீ காளியம்மன் அன்னதான குழுவினர் சார்பாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் இரவு மேட்டுராஜாக்கா பட்டி தெப்பத்தில் அம்மன் கரகங்கள் அலங்கரித்து, மெயின் ரோடு, மணிக்கூண்டு, வாணி விலாஸ் வழியாக, அம்மன், விநாயகர், முருகன், மாரியம்மன் மின் அலங்கார ரதங்கள், கரகாட்டம், மேள வாத்தியங்கள் முழங்க, அம்மன் சன்னதி வந்து சேரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

