ஒரு குட்நியூஸ் மக்களே!, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக தங்க நகைக்கடன் ‘ATM’

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக AI தொழில் நுட்பத்தில் தங்க நகைகடன் ATM இயந்திரம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம், அதனுள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளின் தரம் மற்றும் எடையை மதிப்பிடுவதற்கு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1911 ஆம் ஆண்டு இந்தியரால் சென்டரல் பேங்க் ஆப் இந்தியா தொடங்கப்பட்டது. தற்போது பல்வேறு கிளைகளுடன் இந்தியா முழுவதும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கி சார்பில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு ATM மூலம் நகைக் கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பபட்டது. இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் கடன் பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருப்பது குறையும்.
தங்க நகை கடன் வசதியை மேம்படுத்தும் வகையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சார்பில். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் கிளையில் தங்க நகை கடன் ATM இயந்திரத்தை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளையில் தங்க நகை கடன் ATM இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் மாதம் வெங்கட ராவ் திறந்து வைத்தார்.
AI தொழில்நுட்பத்தில் புதிய நகை கடன் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் வாடிக்கையாளரின் செல் நம்பர், ஆதார் நம்பர் உள்ளிட்டவற்றை செலுத்திய பிறகு தங்க நகையை இயந்திரத்தின் ஒரு பகுதியில் வைத்தால் நகையின் மதிப்பு அறிவிக்கப்படும்.
வாடிக்கையாளர் செலுத்திய நகைக்கு வழங்கப்படும் தொகையின் மதிப்பு திரையில் தெரிவிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்க நகைக்கு பதிலாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். பல்வேறு வசதிகளுடன் தங்க நகைகடன் ATM இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.