சுகாதார அலுவலர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை!
ராணிப்பேட்டை மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அலுவலகத்தில் மருத்துவத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு எண் 85 மற்றும் 110 ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் நிறைவேற்றினார்.
இந்நிகழ்வில் மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிவிப்பு எண் 85ன் படி நோய்களை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் (IHPI-IDSP) மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார நல பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கையேட்டினை வெளியிடுதல் மற்றும் அறிவிப்பு எண் 110 படி செப்டம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் 4வது சர்வதேச பொது சுகாதார மாநாடு 2025 இதற்கான இலச்சினை, வலைதளம் மற்றும் கருப்பொருள் பாடல் வெளியிடுதல் ஆகியவற்றை நிறைவேற்றினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “வேலூர் மாவட்டத்திற்கு சென்றபோது திடீரென ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சோதனைக்காக சென்றேன். ராணிப்பேட்டை மேல்விஷாரம் மருத்துவமனையில் மிகவும் வருத்தத்துக்குரிய சம்பவம் நடந்தது.
ராணிப்பேட்டை மருத்துவமனையில் காலை 8 மணிக்கே மருத்துவர்கள் இல்லை, இது பெரிய அவல நிலை. சுகாதாரத்துறை இயக்குநரை தொடர்பு கொண்டு உடனடியாக மருத்துவர், செவிலியர் பாதுகாவலரை இடைநீக்கம் செய்ய கூறினேன், மூவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மருத்துவமனை முழுவதும் சுற்றினேன். மருத்துவமனையில் காலை 8 மணிக்கு ஒரு மருத்துவர் கூட இல்லாத அவல நிலை. மருத்துவர் பற்றாக்குறை இருந்தால் பரவாயில்லை. ஆனால் மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்து மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டார்கள்.
மாவட்ட சுகாதார அலுவலர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். தோழமையுடன் செயல்படும் நான் சில நேரங்களில் பணி நீக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலையும் வரும் மாவட்ட சுகாதார அலுவலர்கள் பொறுப்புடனும் கவனத்துடன் செயல்பட வேண்டும்” என எச்சரிக்கையாக தெரிவித்தார்.

