ராமநாதபுரம் தாலுகா நகர் காங்கிரஸ் அலுவலகம் சூறை!
 
					ராமநாதபுரம் தாலுகா நகர் காங்கிரஸ் அலுவலகம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 28 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துகளை பாதுகாத்திடும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு தலைவர் கே.வீ.தங்கபாலு Ex MP தலைமையில், இணைச் செயலாளர் நிதின் கும்பல்கர், ஒருங்கிணைப்பாளர் S.S.ராமசுப்பு Ex MP, பொதுச் செயலாளர் D.செல்வம் ஆகியோர் பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கான சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே 16 சென்ட் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை ராமநாதபுரம் மாவட்ட, நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திருவாடானை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் தலைமையில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் வட்டார நகர காங்கிரஸ் கட்சி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அவ்விடத்தை மீட்டு அந்த இடத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கான போர்டு வைத்து காங்கிரஸ் கட்சியின் கொடி பறக்க விடப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு பூட்டப்பட்டிருந்த தாலுகா நகர் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் காவலில் இருந்த காவலரை விரட்டிவிட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று மது அருந்திவிட்டு அங்கிருந்த சேர்களை உடைத்து பேனர்கள் அனைத்தையும் கிழித்து, அலுவலக போர்ட் மற்றும் கொடி கம்பத்தை அகற்றி, ஆங்காங்கே எலுமிச்சம் பழங்களை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் மற்றும் நிர்வாகிகளை மர்ம நபர்கள் தாக்கவும் முற்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு தகவல் தெரிவித்தும், காவல்துறையிடம் புகார் அளிக்கவும் உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தெரிவித்தார்.


 
			 
			 
			 
			 
			