NDA கூட்டணிக்கு சிறுபான்மை மக்கள் துணை சென்று விடக்கூடாது – ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்
தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதைக்க நினைக்கும் NDA கூட்டணிக்கு சிறுபான்மை மக்கள் துணை சென்று விடக்கூடாது என ராமநாதபுரத்தில் அனைத்து ஜமாஅத்தார்கள் கூட்டத்தில் திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கேட்டுக்கொண்டனர்.
ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்பாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் அனைத்து ஜமாஅத்தார்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நவாஸ்கனி எம்.பி., தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் வருசை முகம்மது முன்னிலை வகித்தார். ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளர் ஜெயனுல் ஆலம் கருத்துரை வழங்கினார்.
இதனைதொடர்ந்து, ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஜமாஅத்தார்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதனைதொடர்ந்து பேசிய காதர்பாட்ஷா முத்துராலிங்கம், “பாஜக வட மாநிலங்களில் சிறுபான்மை வாக்குகளை சிதைத்து சொற்ப எண்ணிக்கையில் வெற்றி பெற்றதோ அதே போன்று தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் சிறுபான்மைமக்களின் 10 சதவீதம் வாக்குகளை சிதைத்து அதன் மூலம் வெற்றி பெற்று விடலாம் என நினைப்பது தமிழகத்தில் நடக்காது. மதசார்பற்ற கூட்டணி தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியால் மட்டுமே சமூக நீதி, சமூதாய அமைதி, பண்பாடு, கலாச்சாரம், இழந்த உரிமையை மீட்டெடுக்க முடியும். இதனால், சிறுபான்மை மக்கள் மாதசார்பற்ற கூட்டணிக்கு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதனைதொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, “மத்தியில் உள்ள பாஜக அரசு சிறுபான்மை மக்களை வஞ்ஜிக்க சட்டத்தின் மூலம் அடக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியை சிறுபான்மை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.
இக்கூட்டத்தில், ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 60 ஜமாஅத்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

